அடுக்குத்தொடர் – பொருள் உள்ள சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும். இது நான்கு சொற்கள் வரையிலும் அடுக்கி வரும்.
இரட்டைக்கிளவி – பொருள் இல்லாத ஒரே சொல் இரண்டு முறை மீண்டும் மீண்டும் அடுக்கி வருவது இரட்டைக்கிளவி ஆகும்.
அடுக்குத்தொடர்
எண் |
அடுக்குத்தொடர் | உதாரணம் |
1 | அடியடி | மாணவரை ஆசிரியர் அடியடியென அடித்தார் |
2 | அடுக்கடுக்கு | அடுக்கடுக்கானப் புகார்கள் குவிழ்ந்தன |
3 | அணியணி | அணியணியாகப் படைகள் சூழ்ந்தன |
4 | அணுவணு | அவரைப் அணுவணுவாக இவருக்குத் தெரியும் |
5 | அதிகமதிகம் | அதிகமதிகமாகப் பேராசை ஏற்படும் |
6 | அலையலை | அலையலையாக மக்கள் கூட்டத்திற்கு வந்தனர் |
7 | அழுகை அழுகையாக | கதை கேட்கும் போது அழுகை அழுகையாக வந்தது |
8 | அளந்து அளந்து | அவனோடு அளந்து அளந்து தான் பேசினாள் |
9 | ஆசையாசை | ஆசையாசையாகக் கட்டிய வீடு |
10 | ஆயிரமாயிரம் | ஆயிரமாயிரம் காலமாக நிலைத்து நிற்கும் கோபுரம் |
11 | இங்குமங்கும் | இங்குமங்கும் அலைந்து கொண்டு இருக்காதீர்கள் |
12 | இரண்டிரண்டு | வெண்பா என்பது இரண்டிரண்டு அடியாக இருக்கும் |
13 | இல்லையில்லை | இல்லையில்லை அவன் சொல்வது பொய் |
14 | இழையிழை | திராட்சைகள் இழையிழையாய்த் தொங்குகின்றன |
15 | எதிரெதிர் | வாகனங்கள் இரண்டும் எதிரெதிரே மோதிக்கொண்டன |
16 | ஏறியேறி | உயரிய கம்பத்தில் ஏறியேறி உயரே செல்கிறார். |
17 | ஓடி ஓடி | ஓடி ஓடி ஓடாய் தேய்ந்த மனிதர் |
18 | கடைகடை | கடைகடையாக ஏறி இறங்கித் துணி எடுத்தோம் |
19 | கட்டங்கட்டம் | பள்ளிகள் மீண்டும் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் |
20 | கட்டுக்கட்டு | கட்டுக்கட்டாகப் பணம் கிடைத்தது |
21 | கதறிக்கதறி | கதறிக்கதறி அழுதார் |
22 | கதைகதை | இரவெல்லாம் கதை கதையாகப் பேசினார் |
23 | காலகாலம் | காலகாலமாக நடந்து வரும் பழக்கம் |
24 | காலங்காலம் | காலங்காலத்தில் ஒரு கல்யாணம் பண்ண வேண்டும் |
25 | காலம்காலம் | காலம்காலமாக நடந்து வரும் பழக்கம் |
26 | கீழே கீழே | இன்னும் கீழேகீழே சென்றால் தண்ணீர் கிடைக்கும் |
27 | குடும்பங்குடும்பம் | குடும்பங் குடும்பமாக நிகழ்வில் கலந்து கொண்டனர் |
28 | குமுறிக் குமுறி | குமுறிக் குமுறி அழுதார் |
29 | கும்பல்கும்பல் | கும்பல் கும்பலாக நடந்து சென்றனர் |
30 | குலுங்கிக் குலுங்கி | குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார் |
31 | குலைகுலையாக | காய்கள் குலை குலையாக காய்த்து தொங்குகின்றன |
32 | குவியல் குவியல் | குப்பையைக் குவியல் குவியலாகக் குவித்துள்ளனர் |
33 | குழுக்குழு | விளையாட்டு அணிகள் குழுக்குழுவாய் வந்தார்கள் |
34 | கூடிக் கூடி | கூடிக் கூடி ரகசியமாகப் பேசினார் |
35 | கூட்டம்கூட்டம் | இளையராஜா கச்சேரிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் |
36 | கொஞ்சங்கொஞ்சம் | அவனை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும் |
37 | கொட்டுகொட்டு | கொட்டு கொட்டென மழை கொட்டித் தீர்த்தது |
38 | கொத்துக்கொத்து | போரில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர் |
39 | கோடிகோடி | கோடி கோடியாகக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு ஈடில்லை |
40 | சடைசடை | அந்தச் சாமியார் சடை சடையாக முடி வளர்த்தார் |
41 | சரம்சரம் | சரம் சரமாகப் பூக்கள் தொங்கின |
42 | சாரைசாரை | சாரை சாரையாக எறும்புகள் ஊறின |
43 | சிரித்துச் சிரித்து | சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது |
44 | சிறிதுசிறிது | சிறுது சிறிதாகப் பணம் சேர்த்தாள் |
45 | சிறிய சிறிய | வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டுங்கள் |
46 | சிறுக சிறுக | சிறுக சிறுக சேமித்த பணத்தில் வீடு கட்டினார் |
47 | சின்னச்சின்ன | சின்னச்சின்ன சண்டைகள் நடப்பது இயல்பானது |
48 | சுக்குச்சுக்கு | சுக்குச்சுக்காக உடைந்து போனது |
49 | சுடச்சுட | சுடச்சுட வடை சுட்டார் |
50 | சும்மாசும்மா | சும்மா சும்மா தொந்தரவு செய்யாதீர்கள் |
51 | சுருள்சுருள் | தலைமுடி ஏன் சுருள் சுருளாக இருக்கிறது |
52 | தனித்தனி | தனித்தனியான வீடுகள் விற்பனைக்கு உள்ளன. |
53 | துடிதுடித்த | குழந்தை கீழே விழுந்தால் தாய் துடிதுடித்தாள். |
54 | துண்டுத்துண்டு | துண்டுத் துண்டாகக் காய்கறிகளை வெட்டினார். |
55 | துளித்துளி | துளித் துளியாகச் சேர்த்த பணம் |
56 | தூள்தூள் | தூள்தூளாக உடைத்து நொறுக்கினார் |
57 | தெருத்தெரு | தெருத்தெருவாக அலைந்து விற்றார். |
58 | தேடித்தேடி | தன்னம்பிக்கை நுால்களை தேடித்தேடி வாசியுங்கள் |
59 | நினைத்து நினைத்து | அந்த நிகழ்வை நினைத்து நினைத்து பார்க்கிறேன் |
60 | நீண்ட நீண்ட | நீண்ட நீண்ட காலம் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் |
61 | படிப்படி | படிப்படியாகப் படித்து முன்னேற்றினார் |
62 | பயந்து பயந்து | பயந்து பயந்து வாழாமல் தயிரியமாக வாழுங்கள் |
63 | பாதிப்பாதி | பாதிப்பாதியாக உடைத்துக் கொடுத்தார் |
64 | பார்த்துப் பார்த்து | பார்த்துப் பார்த்து வளர்த்தார் |
65 | புதிதுபுதிது | புதிது புதிதாக ஏதாவது செய்வார் |
66 | புள்ளிப்புள்ளி | உடலில் புள்ளிப்புள்ளியாகத் தழும்புகள் ஏற்பட்டன |
67 | பெரிய பெரிய | பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர் |
68 | பேந்தப்பேந்த | பேந்தப்பேந்த விழித்தான் |
69 | பொடிப்பொடி | பொடிப்பொடியாக நொறுக்கினர் |
70 | மலைமலை | மலை மலையாக வேலை உள்ளது |
71 | முதல்முதல் | முதல் முதலில் நிலவிற்கு நாம் சென்றோம் |
72 | முத்துமுத்து | முத்து முத்தாக எழுதினர் |
73 | மெதுமெது | மெது மெதுவாக நடந்து சென்றார் |
74 | மெல்ல மெல்ல | அச்சிறுமி மெல்ல மெல்ல நடந்து வந்தாள் |
75 | வகைவகை | வகை வகையாகச் சமைத்திருந்தார் |
76 | வண்டிவண்டி | வண்டி வண்டியாகப் புகாரளிக்கப்பட்டன |
77 | வண்ண வண்ண | வண்ண வண்ண மீன்களை வாங்கி வந்தோம் |
78 | வழிவழி | தமிழர்களால் வழிவழியாக விளையாடப்படுகிறது |
79 | விடிய விடிய | விடிய விடிய திருவிழா நடந்தது |
80 | விதம்விதம் | விதம் விதமாகக் கதை சொல்கிறார் |
81 | விதவிதம் | வித விதமான துணிகள் உள்ளன |
82 | விழுந்து விழுந்து | விழுந்து விழுந்து சிரித்தார் |
83 | வீடுவீடு | வீடு வீடாக ஏறியிறங்கி விற்றார் |
84 | வீதிவீதி | வீதி வீதியாக அலைந்தோம் |
85 | வேகவேகம் | வேக வேகமாக நடந்தோம் |
86 | வேறுவேறு | வேறுவேறு நண்பர்கள் மூலம் உதவினோம் |
இரட்டைக்கிளவி
எண் | இரட்டைக்கிளவி | உதாரணம் |
1 | கசகச | கசகச என வியர்த்தது |
2 | கடகட | கடகட என சிரித்தான் |
3 | கடுகடு | சிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள் |
4 | கடுகடுத்த | என் பேச்சைக் கேட்டதும் அவர் முகம் கடுகடுத்தது. |
5 | கணகண | மணிகள் கணகணவென ஒலிக்க |
6 | கணீர் கணீர் | வெண்கல குரலில் கணீர் கணீர் எனப் பாடினார் |
7 | கதகத | அது கதகதவென கொதித்தது |
8 | கபகப | கபகப என பசிக்க ஆரம்பித்தது |
9 | கமகம | கமகம என மணந்தது முல்லை |
10 | கரகர | கரகரவெனக் கழுத்தை அறுத்தார் |
11 | கரகரத்த | கரகரத்த குரலில் பேசினான் |
12 | கருகரு | அவன் தலைமுடி கருகருவென இருந்தது |
13 | கலகல | கலகலவெனச் சிரித்தாள் |
14 | கலகலத்த | கலகலப்பான பேச்சு |
15 | கறகற | மின்விசிறிகள் கறகற என சுழன்றன |
16 | கிசுகிசு | கிசுகிசு ஒன்றைக் கேட்டேன் |
17 | கிச்சுகிச்சு | கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி |
18 | கிடுகிடு | கிடுகிடு பள்ளம் பார்த்தேன் |
19 | கிளுகிளு | கிளுகிளு படம் பார்த்தாராம் |
20 | கிளுகிளு | அவள் கிளுகிளுவென சிரித்து |
21 | கிறுகிறு | கிறுகிறு என்று தலை சுற்றியது |
22 | கீச்சுகீச்சு | கீச்சுகீச்சு என குருவிகள் கத்தின |
23 | குசுகுசு | குறைந்த ஓசையில் குசுகுசுவென பேசிக்கொண்டே இருந்தார்கள் |
24 | குடுகுடு | குடுகுடு கிழவர் வந்தார் |
25 | குபுகுபு | குபுகுபு என குருதி கொட்டியது |
26 | குளுகுளு | குளுகுளுவென உதகை இருந்தது |
27 | குறுகுறு | குறுகுறுத்தது குற்ற நெஞ்சம் |
28 | கொழகொழ | கொழகொழ என்று ஆனது சோறு |
29 | கொழுகொழு | கொழுகொழு என்று குட்டி |
30 | சடசட | சடசடவென கிளை முறிந்தது |
31 | சதசத | சதசத என்ற சேற்றில் விழுந்தேன் |
32 | சரசர | சரசர என்று மான்கள் ஓடின |
33 | சலசல | பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது |
34 | சவசவ | சவசவ என்று முகம் சிவந்தது |
35 | சாரைசாரை | சாரைசாரையாக மக்கள் வந்தனர் |
36 | சிடுசிடு | சிடுசிடுவென முகத்தைக் கோபத்தோடு வைத்திருந்தார். |
37 | சிலுசிலு | சிலுசிலு எனக் காற்று வீசியது |
38 | சுறுசுறு | சுறுசுறுவெனக் கோபமாக பேசினார் |
39 | சொதசொத | சொதசொதவென மழையில் நனைந்து விட்டார் |
40 | சொரசொர | சொரசொரப்பான தாடி |
41 | டாங்டாங் | டாங் டாங்கென மணி ஒலித்தது |
42 | தகதக | தகதக மின்னும் மேனி |
43 | தடதட | தடதட என் கதவைத் தட்டினான் |
44 | தடதட | தடதடவென இழுத்துச் சென்றார் |
45 | தரதர | தரதர என்று இழுத்து சென்றான் |
46 | தழுதழுத்த | தழுதழுத்த குரலில் பேசினார் |
47 | தளதள | தளதள என்று ததும்பும் பருவம் |
48 | திக்குத்திக்கு | திக்குத்திக்கு என் நெஞ்சம் துடிக்கும் |
49 | திடுதிடு | திடுதிடு என நுழைந்தான் |
50 | திடுதிடுப் | கார்களில் திடுதிடுப்பென மர்ம கும்பல் ஒன்று வந்தது. |
51 | திபுதிபு | திபுதிபு என மக்கள் புகுந்தனர் |
52 | திருதிரு | திருதிரு என விழித்தான் |
53 | துடிதுடித்தல் | சோகச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனோம் |
54 | துருதுரு | துரு துருவென ஏதாவது செய்து கொண்டிருப்பாள் |
55 | துறுதுறு | துறுதுறு என்ற விழிகள் |
56 | தைதை | தைதை என்று ஆடினாள் |
57 | தொணதொண | தொணதொணவெனப் பேசாமல் இருங்கள் |
58 | தொபுதொபு | தொபுதொபுவென்று மழை வெள்ளம் கொட்டியது |
59 | தொளதொள | தொள தொள என சட்டை அணிந்தார் |
60 | நங்குநங்கு | நங்குநங்கு எனக் குத்தினான் |
61 | நசநச | எங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம் |
62 | நணுகுநணுகு | நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்) |
63 | நமநம | தொண்டை நமநமவென சளி பிடிப்பது போலிருக்கிறது |
64 | நறநற | நறநற என பல்லைக் கடித்தான் |
65 | நறு நறு | ஆத்திரத்துடன் பற்களை நறுநறுவென்று கடித்தாள் |
66 | நெடுநெடு | அவள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாள் |
67 | நெருநெரு | அரிசியை சற்று நெருநெருவென்று அரைக்கவும் |
68 | நைநை | நைநை என்று அழுதாள் |
69 | நொகுநொகு | நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள் |
70 | பகபக | வாய் விட்டு பகபகவென சிரித்தான் |
71 | பக்குப்பக்கு | பக்குப்பக்கு என்று நெஞ்சு அடிக்கும் |
72 | படபட | கண்ணகி படபடவெனப் பேசிச் சிரித்தான் |
73 | படபடத்த | பாம்பைப் பார்த்ததும் நெஞ்சம் படபடத்தது |
74 | பதைபதைத்த | கைக்குழந்தைகளுடன் பதைபதைத்த பாட்டி |
75 | பரபர | பரபரப்பு அடைந்தது ஊர் |
76 | பரபரப்பு | வேலை முடிக்க வேண்டும் என அவனுக்கு பரபரப்பு இருந்தது |
77 | பளபள | பளபள என்று பாறை மின்னியது |
78 | பளபளத்த | கண்ணாடிபோல் பளபளத்த தரையில் |
79 | பளார் பளார் | பளார் பளாரென கன்னத்தில் அறைந்தார் |
80 | பளிச் | பளிச்செனப் பதில் சொன்னார் |
81 | பளிச்பளிச் | கடையை பளிச்பளிச் என்று சுத்தம் செய்தாள் |
82 | பளீர்பளீர் | கண்ணாடி பளீர்பளீர் என்று மின்னியது |
83 | பிசுபிசு | எண்ணெய் பிசுபிசுவென இருந்தது |
84 | பிசுபிசுத்த | பிசுபிசுத்தது போராட்டம் |
85 | புசுபுசு | இட்லி புசுபுசுவென கிடைக்கும் |
86 | பொசுபொசு | எலி தன் உணவை பொசுபொசு என மென்றது |
87 | பொதபொத | பொதபொத பன்றியின் வயிறு |
88 | பொலபொல | பொலபொல என வடித்தாள் கண்ணீர் |
89 | மங்குமங்கு | மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா? |
90 | மசமச | மசமச என்று நிற்கவில்லை |
91 | மடக்கு மடக்கு | மடக்கு மடக்கு எனவும் குடித்தார் |
92 | மடமட | மடமட என நீரைக் குடித்தார் |
93 | மடமட | மரம் மடமட என முறிந்தது |
94 | மலங்க மலங்க | மலங்க மலங்க விழித்தான் |
95 | மளமள | மள மள என எல்லாம் நிகழ்ந்தது; மளமளவெனப் பற்றி எரிந்ததீ |
96 | மாங்குமாங்கு | மாங்குமாங்கு என்று உழைப்பார் |
97 | மினுகு மினுகு | மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்) |
98 | மினுமினு | மீன்கள் மினுமினு என்று மின்னியது |
99 | முணுமுணுத்த | மனதிற்குள் முணுமுணுத்தார் |
100 | மூசுமூசு | மூசுமூசு என்று அழுகிற சத்தம் கேட்டது |
101 | மெது மெது | மெதுமெது இட்லி வேணுமா? |
102 | மொசுமொசு | மொசுமொசு என மயிர் |
103 | மொச்சுமொச்சு | மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன் |
104 | மொடமொட | மொடமொட சத்தம் கேட்கப்பட்டது |
105 | மொர மொர | மொர மொர முறுக்கு |
106 | மொழுமொழு | மொழுமொழு என்று தலை வழுக்கை. |
107 | மொறமொற | மொற மொற என முறைத்தாள் |
108 | மொறுமொறு | மொறுமொறு என்று சுட்டாள் முறுக்கு |
109 | லபக்கு லபக்கு | லபக்கு லபக்கென்று முழுங்கினார் |
110 | லபலப | லபலப என்று அடித்துக் கொண்டாள் |
111 | லபோலபோ | லபோலபோ என அடித்துக் கொண்டாள் |
112 | லொடலொட | லொடலொட என்றும் பேசுவாள் |
113 | வடவட | வடவட என வேர்த்தன கைகள் |
114 | வதவத | வதவத என ஈன்றன குட்டிகள் |
115 | வழவழ | வழவழ என்று பேசினாள் கிழவி |
116 | விக்கி விக்கி | விக்கி விக்கி அழுதது குழந்தை |
117 | விசுக் விசுக் | பெண் ஒருவர் விசுக் விசுக்கென்று நடக்கிறார் |
118 | விசுவிசு | விசுவிசு என்று குளிர் அடித்தது |
119 | விடுவிடு | விடுவிடு என்று விரைவாக வந்தாள் |
120 | விண் விண் | ஒரே பக்கமாக தலை விண்விண்ணென்று தெறிக்கும் |
121 | விறுவிறு | விறுவிறுப்பான கதையாம் |
122 | வெடவெட | வெடவெட என நடுங்கியது உடல் |
123 | வெடுவெடு | வெடுவெடு என நடுங்கினாள் |
124 | வெதுவெது | வெதுவெதுப்பான நீரில் குளித்தாள் |
125 | வெலவெல | வெலவெல என்று நடுங்கினேன். |
இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் கதை
சலசலக்கும் நீரோடையில்
பயந்து பயந்து மான் ஒன்று
மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்து
மசமச வென நிற்காமல்
மடமட வென நீர்ப் பருக….அங்கே
பதுங்கிப் பதுங்கிப் புலி ஒன்று
திகு திகுத் தீப்பொறி தெரிக்கும் கண்ணால்
குறுகுறு வென மானைப் பார்க்க… இதனை
தூரத்தில் கண்ட இருவரின்…
உடல் வெலவெலத்துப் போய்
கால்கள் வெடவெட வென நடுநடுங்க
புலி புலி என கத்தவும் துணிவின்றி
செய்வதறியாது திரு திரு வென முழித்து நின்றனர்!
அப்போது ஒரு கொழு கொழு முதலைக் குட்டி
மெதுமெது வாய் நீந்தி வர
புலியின் கவனம் சற்றேச் சிதற
அச்சமயம் சடசட வென மரக்கிளை ஒன்றும்
தடதட வென முறிந்து விழ
அச்சம் கொண்ட மான்
கடகட வென ஓட்டம் பிடித்து
விடுவிடு வெனத் தப்பிச் சென்றது!
ஏமாந்த புலி சீற்றத்துடன்
சொரசொரப்பு முதலை மீது பாய
ஒரு பரபரப்புப் போராட்ட முடிவில்
குபுகுபு வென இரத்தம் வெளியேற
மளமள வென முதலைச் சரிந்தது…பாவம்!
துடிதுடித்து உயிர்த் துறந்தது!
அதனைத் தரதர வெனப் புலி இழுத்துச் சென்று
தனி ஒரு இடத்தில் சுவைத்து மென்ற
அக்கோரக் காட்சிக் காணக் காண
கிறுகிறு வெனத் தலைச் சுற்றியது
படபட வென மார்த் துடித்தது!
பயத்தில் மரத்தின் கீழ் இளைப்பாற
களைப்பில் தூக்கம் தான் தலைக்கேற
தன்னாலே இரு விழி இமையும் மூட
தன்னிலை மறந்து இருவரும் உறங்கினர்
கீச்கீச் எனப் பறவை ஒலி எழுப்பியது
பொலபொல வென விடிந்ததும் புரிந்தது
தகதக வென சூரியன் ஜொலிக்க
சிலுசிலு வெனத் தென்றல் மிதக்க
கமகம வென வனப்பூக்கள் மணமணக்க
தூக்கமும் கலைந்தது
துணிவும் பிறந்தது!
தூரத்தில் பீப் பீப் ஒலியோடு
வனத்துறை ஜீப் ஒன்று
கிடுகிடு பள்ளம் தாண்டி குதித்து நின்றிட
இருவரும் எழுந்தனர்..மனக்
கலவரம் களைந்தனர்
அதில் நெடுநெடு வென வளர்ந்த ஒருவர்
கருகரு மீசை முறுக்கி கரகரப்பான குரலில்
குடுகுடு கிழவியரே இங்க என்ன பண்றீங்க?
சுள்ளிப் பொறுக்க வந்தீங்களா?இது ஆபத்தான பகுதி
இனி வரக்கூடாது…சரியா” என மிரட்ட…
சரிசரி என்பது போல் மண்டைய மண்டைய ஆட்டினர் கிழவியர்
ஜீப்பில் இடம் கொடுத்தவர்
கப்பில் சுடச்சுடத் தேனீருடன்
மெத்து மெத்து பன்னும் மொறுமொறு பிஸ்கட்டும் தர
கபகப பசிக்கு அமிர்தமென கிடைத்ததை
நன்றியுடன் வாங்கிக் கொண்டனர்
ருசித்து ருசித்து உண்டனர்
மெதுவாக ஜீப் முன்னேற
பாதையின் இரு மருங்கிலும்
வேடிக்கைப் பார்த்து வந்தனர்
அதிசய காட்சிகள் கண்டனர்
கிளைகள் மீது விதவிதமாய் வண்ண வண்ணப் பறவைகள் அமர
கூட்டம் கூட்டமாய் யானைகள் வரிசை வரிசை யாய் நகர
சரசர வென இரு மான் குட்டிகள் துள்ளிதுள்ளி எகிர
புற்றிலிருந்து கட்டெறும்புச் சாரை சாரை யாய் ஊர
அழகிய மயில் ஒன்று அழகாய்த் தோகை விரித்து விரித்து ஆட
கண் கொள்ளாக் காட்சி கண்டனர்
கலகலப்புடன் விடைப்பெற்றுச் சென்றனர்
இரட்டைக் கிழவியரின் அனுபவத்தை
உங்களிடம் நான் அனுபவித்து உரைத்தது விறுவிறுப்பாக இருந்ததா?
இல்லை வழவழ கொழ கொழ என்று இருந்ததா?
குசுகுசு என்று இரகசியம் வேண்டாம் தோழர்களே
பளிச் பளிச் என்று பதில் கூறுங்கள்!