தமிழ் – தகவலைக் கடத்தும் ஒலியை, செய்கையை மொழி என்பர். தமிழ் ஒரு மொழி (A Language)
எழுத்து (Alphabet) – எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். (அ, ஆ, இ, ஈ)
சொல் (Word) – எழுத்து தனித்து நின்றோ அல்லது கூடி நின்றோ பொருள் தருவது சொல். (அடி, ஆடு, இது, ஈட்டி)
சொற்றொடர் (Sentence) – இரண்டுக்கும் மேற்பட்ட சொல் சேர்ந்து பொருள் தந்தால் சொற்றொடர் (வாக்கியம்).
கட்டுரை (Essay) – ஒரு தலைப்பைப் பல சொற்றொடர்கள் கொண்டு எழுதுவது கட்டுரை ஆகும்.
__________
இலக்கியத்தமிழ் (Literature) – பழங்காலத்தில் அனைத்தும் பாடல் வடிவில் இருந்தது. அவைகள் பிரித்து எழுதப்படாமல் சேர்த்து எழுதப்படும் முறையில் இருக்கும். பிரித்து எழுதாமல் சேர்த்து எழுதும் தமிழ் இலக்கியத்தமிழ். இலக்கிய தமிழில் கவிச் சுவையும், கருத்துச் சுவையும் நிரம்பி இருக்கும்.
கவிதை (Poem) – பாடல்கள் தனித்தனி சொற்களாக, கருத்து, ஓசை நயம்பட இருப்பது கவிதை.
பாடல் (Song) – சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். திரைப்பட பாடல்கள்
__________
எழுத்துத்தமிழ் (உரைநடை) – இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எழுதப்படும் தமிழ், எழுத்துத்தமிழ் எனப்படும். இது பேச்சுத் தமிழிலிருந்து மாறுபட்டு நிற்கும்.
பேச்சுத்தமிழ் (Spoken Tamil)- பொதுவாகப் பொதுமக்கள் உரையாடும் தமிழ் பேச்சுத் தமிழாகும். பேசும் தமிழும், எழுதும் தமிழும், மாறுபட்டு இருக்கும், பேசும் தமிழ் இலக்கணம் இல்லாமல், கொச்சையாக இருக்கும். இதனைக் கொச்சைத்தமிழ், வழக்குத்தமிழ், வட்டாரத்தமிழ் என்றும் அழைப்பர்.
கலப்புத்தமிழ் – பிறமொழிச் சொல் கலந்த தமிழை கலப்புத்தமிழ் என்பர். பொதுவாக, தமிழர்கள் வாழ்விடங்களில் இருக்கும் மொழிகளின் கலப்பு, அவர்களின் தமிழில் இருக்கும். உதாரணமாகச் சிங்கப்பூர் தமிழர்களின் தமிழில், சீனச் சொற்கள் கலந்திருக்கும். தங்கிலீஷ் என்பது தமிழில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்து பேசுவதாகும்.