முதல் நிலை கட்டுரை

தமிழர் ஆடை ⭐

மனிதன் நாகரிகத்தின் வளர்ச்சிநிலை உடையாகும். மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் பல காரணிகளுள் உடையும் ஒன்று. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி. ஆடை மனிதனை முழுமையாக்கி விடுகிறது. 

உலகில் உள்ள மனிதர்கள் உடுத்தும் உடை அந்தந்த நிலத்தின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றபடி அமைந்ததாகும். அதாவது உலகில் குளிர், வெயில், மழையெனப் பல்வேறு தட்பவெட்ப நிலைகாணப்படுகிறது. குளிர், மழை நிறைந்த நாடுகளில் உடல் முழுவதும் மறையும்படி கணமான உடையும், வெயில் நிறைந்த பகுதிகளில் மெல்லிய ஆடையும் உடுத்தினர். அந்த அடிப்படையில் தான் தமிழர்களும் தம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றபடி பருத்தி ஆடை சிறந்தது என அறிந்து பயன்படுத்தினர்.

ஒவ்வொரு இனத்திற்கென்று தனித்த ஆடை அடையாளங்கள் உண்டு. உலகெங்கும் வாழும் பல்வேறு இனங்கள், குறைந்தபட்சம் தனது பாரம்பரிய ஆடையைத் திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் உடுத்தி, தங்கள் அடையாளத்தைப் பேணி காத்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழர்களின் திருமணங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், பண்டிகை நாட்களிலும், அடையாள உடுப்புகளாக இருப்பவை வேட்டி சட்டைகளும் புடவைகளும் ஆகும்.

ஆண்கள், அனைத்து வயதினரும் வேட்டி சட்டை துண்டு பயன்படுத்துவர். பெண்களுக்குப் புடவையும், பருவப் பெண்களுக்குத் தாவணியும், சிறுமிகளுக்குப் பாவாடை சட்டையும் அணிவர்.

நம் உடலை உறுத்தாத மென்மையும், காண்போர் மனதை உறுத்தாத மேன்மையுமே தமிழர் உடைகளின் இலக்கணம்.

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற குறளில் வள்ளுவர் உடையையே முதலிடத்தில் வைத்துப் போற்றுகிறார்.