மூன்றாம் நிலை கட்டுரை

சுற்றுலா

ஒருவனுக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைப்பது அவன் மேற்கொள்ளும் பயணத்தின் மூலமாகத்தான். கொலம்பஸ், புத்தர் முதல் காந்தி வரை பயணத்தின் மூலமே மேன்மை அடைந்துள்ளார்கள்.

தட்பவெப்ப நிலை, கலாச்சாரம், மக்களின் பழக்க வழக்கங்கள் எனச் சுற்றுலாவில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் இது போன்ற சுற்றுலா மட்டுமே நம்மை மனிதத்தோடும் உயிர்ப்போடும் வைத்திருக்கிறது.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் சில மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்லுதல் நன்று

தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அருகில் உள்ள கோவில், கடற்கரை, பூங்கா, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குக் குடும்பத்தினருடன் சில மணி நேரங்களைச் செலவிட்டாலே போதுமானது.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டுப் பேசக் குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும். சுற்றுலா குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும், மன அழுத்தத்தைக் குறைக்கும், வாழ்க்கையை இனிமையாக்கும்.

பயண விரும்பி’ என்று சொல்லக்கூடியவர்கள் மலைகள், காடுகள், கடல் பயணம் எனப் பல வழிகளில் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். பயணத்தின் போதே கதைகள் புத்தகம் எழுதுவது கவிதை எழுதுவது போன்ற வேலைகளைச் செய்து தங்களது பொருளாதார தேவையையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

சுற்றுலாவில் எடுக்கப்படும் புகைப்படங்களும் காணொளிகளும் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும்.