இலக்கணம் கட்டுரை

சொல் – பெயர்ச்சொல்

சொல்

ஒரெழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் உணர்த்துவது சொல் எனப்படும்.

சொல் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

பெயர்ச்சொல் – ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

வினைச்சொல் – வினை என்றால் செயல் என்று பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

இடைச்சொல் – பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா.) அவனுக்குக் கொடுத்தான் = அவன் + கு + கொடுத்தான். இதில், கு என்பது இடைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது.

உரிச்சொல் – பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
(எ.கா.) மா – மாநகரம் சால – சாலச்சிறந்த

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

  1. பொருட்பெயர் – பொருட்களின் பெயரைக்குறிக்கும் சொல் பொருட்பெயர் எனப்படும்.
    (எ.கா.) அழகன், குமரன், மலர்க்கொடி, தென்னை, நாற்காலி, அடுப்பு, தட்டு, எண்ணெய், மண், நீர், காற்று
  2. இடப்பெயர் – இடங்களின் பெயரைக் குறிக்கும் சொல் இடப்பெயர் எனப்படும்.
    (எ.கா.) வீடு, தெரு, பள்ளி, கோவில், மக்கள் வாழிடம், தோட்டம், காடு, இல்லம், குளம்
  3. காலப்பெயர் – காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் காலப்பெயர் எனப்படும்.
    (எ.கா.) காலை, சித்திரை, தைத்திங்கள், கோடைக்காலம், செவ்வாய்க்கிழமை
  4. சினைப்பெயர் – உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் சினைப்பெயர் எனப்படும்.
    (எ.கா.) தலை, கண், மூக்கு, வாய், செவி, நாக்கு, புல், வயது, கை, கால், விரல், வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, விதை.
  5. பண்புப் பெயர் (அ) குணப்பெயர் – பண்பை அல்லது குணத்தை குறிக்கும் பெயர்ச்சொல் பண்புப் பெயர் எனப்படும்
    (எ.கா.) நிறம், வடிவம், சுவை, குணம், பத்துமீட்டர் துணி, பத்து கிலோ அரிசி, ஐந்துபடி எண்ணெய், வட்டப்பலகை, சதுரவீடு, செவ்வகப் புத்தகம், முக்கோணம் கூம்பு, செம்மை.
  6. தொழிற்பெயர்: தொழிலைக் குறிக்கும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் எனப்படும்.
    (எ.கா.) ஆட்டம், விளையாட்டு, எழுதுதல், சிரித்தல்.