நான்காம் நிலை கட்டுரை

ஈழத்தமிழர் வரலாறு

ஈழத்தில் தமிழர் தாயகத்தின் தோற்றம்

கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தமிழர் வரலாறு தனித்தன்மையாக வளரத் தொடங்கியது. இதற்குத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாறுதல்கள் முக்கிய காரணங்களாகும். பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பௌத்த, சமண மதங்கள் வேரூன்றத் தொடங்கின. இதற்கு எதிராகப் பக்தி இயக்கம் உருவாகியது.

இம்முரண்பாடு ஈழத்திலும் தொடர்ந்து இந்து, பௌத்தம் என்ற சமயப் பிரிவினைக்கு வழிகோலியது. இப்பிரிவினை தமிழ், சிங்களம் என்ற இன முரண்பாட்டுக்கும் வழிவகுத்தது. இதனால் தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் குடியேற வேண்டிய நிலையேற்பட்டது. 7ஆம் நூற்றாண்டின் பின்னர் தமிழக அரசமரபினர் ஈழத்தின் மீது அடிக்கடி படையெடுத்தனர். அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழர்களின் துணையுடன் அநுராதபுர அரசை வெற்றி கொண்டனர். பின்னர் வடதமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது, அநுராதபுர அரசிற்கு எதிரான படையெடுப்புகள், கிளர்ச்சிகள் உருவாகக் காரணமாக அமைந்தது. இதனால் வடக்கில் தமிழ் அரசு ஒன்று உருவாக்கம் பெற்றது.

அத்துடன், பல்லவர் காலத் தமிழக வணிகர்களின் செல்வாக்கு ஈழத்திலும் ஏற்பட்டது. இவர்களின் வழிபாட்டிற்காக ஈழத்தில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டன. இதனால், ஈழத்தில் இந்துப் பண்பாடு மேலும் வளரத் தொடங்கியது. தென்னிந்தியாவில் பரந்த பேரரசை உருவாக்கிய சோழர்கள் கி.பி.993இல் அநுராதபுர அரசைக் கைப்பற்றி பொலநறுவையைப் புதிய தலைநகராக்கி 77 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சியில் தமிழ் அரச மொழியாகவும் இந்து மதம் அரச மதமாகவும் மாற்றமடைந்தன.

இதனால், தமிழும் இந்துமதம் சார்ந்த பண்பாடுகளும் ஈழத்தில் பெருவளர்ச்சி கண்டன. சோழரின் அரசியல், பொருளாதார, பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள் பெருமளவுக்கு வடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே செல்வாக்குப் பெற்றிருந்தன. அதில் திருகோணமலை சோழரின் இரண்டாவது தலைநகராகச் செயற்பட்டது. சோழர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து பலர் ஈழத்தில் வந்து குடியேறினர். இவர்கள் சோழர் ஆட்சியின் பின்னரும் ஈழத்திலேயே வாழ்ந்தனர்.

இதனால், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழரின் தொகை மென்மேலும் பெருகியது. 1070களிலிருந்து பொல வயில் சிங்கள மன்னர்களின் ஆட்சி வலுப்பெற்றது ஆயினும், சோழப் படைவீரர்களே சிங்கள அரசினதும் பௌத்த மதத்தினதும் காவலர்களாக இருந்தனர். இதனால், இந்துக் கோவில்களைப் பேணுவதில் சிங்கள மன்னர்கள் அக்கறை காட்டினர். சோழராட்சியில் அரச மொழியாக இருந்த தமிழை, சிங்கள மன்னர்கள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களுக்குத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தினர்.

பொலநறுவைக்கால சிங்கள அரசில் முதன்முதலாகச் சிங்களத்துடன் தமிழும் அரசமொழித் தகுதியைப் பெற்றது. 1215இல் தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த கலிங்கமாகன் பொலநறுவையைக் கைப்பற்றினார். இவர் பௌத்த சிங்கள மக்களுக்கு எதிராகவும் தமிழருக்குச் சார்பாகவும் ஆட்சி நடத்தினார். அதனால், வெறுப்படைந்த சிங்கள மக்கள் பொலநறுவையிலிருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இதன் விளைவால் தமிழருக்குச் சார்பான புதிய அரசொன்று வடக்கே தோன்றியது. அவ்வரசு வன்னியில் தோன்றியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.