நான்காம் நிலை கட்டுரை

நெய்தல் தமிழகம்

தமிழகக் கடலோரப் பகுதிகள், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, இந்திய துணைக்கண்டம் ஆகியவற்றைச் சார்ந்து தென்கிழக்குப் பகுதிகளில் 1,076 கிமீ அமைந்துள்ளது.

வடக்கே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து ஆரம்பித்து, தெற்கே இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவை அமைந்துள்ள கன்னியாகுமரி வரையிலும் பரந்துவிரிந்துள்ளது.

இக்கடலோரத்தில் 14 மாவட்டங்களும், 15 பெரிய துறைமுகங்களும், ஏரிகளும், நீர் நிலைகள், சதுப்புநிலங்கள், கடற்கரைகள் ஆகியவையும் உள்ளன.

கடல் வணிகம்

தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்களாகச் சென்னைத் துறைமுகம், எண்ணூர் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, குளச்சல் நாகப்பட்டினம் ஆகியவை விளங்குகின்றன. இதுமட்டுமின்றி 11 சிறிய துறைமுகங்களும் உள்ளன. சுமார் 10.5 இலட்சம் மீனவர்களும் 3 பெரிய மீன்பிடி துறைமுகங்களும், 3 நடுத்தர மீன்பிடி துறைமுகங்களும், 363 மீன்பிடி நிலையங்களும் உள்ளன. இங்குபிடிக்கப்படும் மீன்கள் 7.2 இலட்சம் டன் ஆகும். 

நெய்தல் தொழில்கள்

மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல், கடல் வாணிபம் போன்றவற்றை நெய்தல் தொழில்களாகும். மீன்வளர்ப்பில், இறால், கடற்காய், கடலட்டை, கிளிஞ்சல், கடற்சாதாழை, ஆளி உள்ளிட்டவைகளும் அடங்கும்.

செடிகளும் விலங்குகளும்

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான இது 21 சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. இது மன்னார் வளைகுடா அருகிலும், தூத்துக்குடிக்கும் தனுஷ்கோடிக்கு மத்தியிலும் உள்ளது. இப்பூங்காவில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்களும், விலங்குகளும் உள்ளன. மொத்தமுள்ள 2,200 இந்திய மீன்களில், சுமார் 510 (23%) வகையான மீன் வகைகள் இப்பகுதியில் உள்ளது.

கடற்கரை

தமிழக கடலோரப் பகுதிகளில் நிறைய கடற்கரைகள் இருக்கின்றன. 

தமிழக கடற்கரைகள்

1. கோவளம்:

இது சென்னைக்கு அருகில் கிழக்குக் கடற்கரையில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

2. எலியட்ஸ் கடற்கரை:

இது சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ளது. மெரினா இக்கடற்கரையின் தெற்கில் அமைந்துள்ள இக்கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயிலும், வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. முந்தைய சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியட்டின் நினைவாக இக்கடற்கரைக்கு எலியட்ஸ் கடற்கரை என்று பெயரிடப்பட்டது. இக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாகக் கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது.கடலில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னுயிரையே ஈந்த டச்சு மாலுமியின் நினைவுச் சின்னம் இது.

3. மெரினா கடற்கரை:

இது ஒரு மணற்பாங்கான கடற்கரை, இதன் நீளம் 13கி.மீ. இது இந்தியாவின் மிக நீளமான இயற்கையான கடற்கரையாகும். உலகின் பதினொன்றாவது நீளமான கடற்கரையாகும்.

4. தங்கக் கடற்கரை (Golden Beach):

வங்கக்கடலோரமாகச் சென்னையில் அமைந்துள்ள வி.ஜி.பி. தங்கக் கடற்கரை சென்னையின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.

5. வெள்ளிக் கடற்கரை (Silver Beach) :

இது கடலூர் மாவட்டத்தில் கடலூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சோழமண்டலக் கடலோரங்களில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மேலும் இது ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

6. தனுஷ்கோடி:

இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து 29 கி.மீ தொலைவில், பாம்பனுக்குத் தென்கிழக்கில் தனுஷ்கோடி அமைந்துள்ளது.

7. புதுச்சேரி கடற்கரை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடலான வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை நகரம் பிரஞ்சு காலனித்துவ கட்டிடங்கள் மற்றும் தமிழ் பாணி நகர்ப்புற கட்டிடக்கலை கொண்டுள்ளது