இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரிக்கச் செய்தனர், இரண்டு சடலங்களும் தனித்தனியே எரிந்து கொண்டிருக்கின்றன.
அப்போது தருமியின் உடலைச் சுற்றிச் சூழ்ந்து. ஊரில் உள்ள யாவரும்,
\’ஐயோ அள்ளிக் கொடுத்த கை எரிகிறதே,
இன் சொல் கூறி வாழ்த்திய வாய் எரிகிறதே,
எல்லோரும் வாழ எண்ணிய நெஞ்சு எரிகிறதே.’
என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், கருமியின் சடலம் எரியும் இடத்திலோ ஒருவர் கூட இல்லை.
வள்ளுவர் ஒருவர் மட்டும் நின்று மிகத் துடி துடித்துப் பதறி அழுது கொண்டிருந்தார். ஊரவர் எல்லார்க்கும் வள்ளுவர்மேல் கோபம் வந்தது.
அவர்களிலே ஒருவன் துணிந்து, ‘தங்களிடம் கேட்கக் கூடாதுதான், என்றாலும் கேட்கிறேன்—என்று சொல்லி,
‘நாங்கள் எல்லாம், தருமி சடலம் பற்றி எரிகிறதே என்று இங்கே நின்று அவன் புகழ் பெருமை சொல்லி அழுகின்றோம்’— கருமி எரியும் இடத்திலே நீங்கள் மட்டும் நின்று அழுகிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டு விட்டான்.
அதற்கு வள்ளுவர்— “இன்பத்திலே ஈத்துவக்கும் இன்பம் என்று ஒன்று உண்டு. இல்லாத மற்றவர்கட்குத் தன் பொருளை வாரி வழங்கிப், பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியடைவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியுறுவது—அந்த இன்பம் எப்படி இருக்கும் என்பதை (தருமி) அவன் வாழ்நாள் முழுதும் செய்து மகிழ்ந்து, மகிழ்ந்து—சவித்துப் போய் எரிகிறான்.
இந்தப் பாவிப் பயல் (கருமி) அவ்வின்பம் எப்படி இருக்கும் என்று அறியாமலே மரித்து எரிகின்றானே ஐயோ—என்று, அலறி அழவேண்டிய இடம், அது வல்ல; இது—என்றார்.
அன்று வள்ளுவரால் ‘ஈகையின் சிறப்பு’ ஊரார் எல்லோர்க்கும் உணர்விலே தைத்து ஊன்றியது. பின் ஈத் துவக்கும் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தனர்.
நாம் இன்றுதான் உணர்கின்றோம். நாம் அப்படி வாழ்கின்றோமா? இனியேனும் வாழ்வோமா?
—எனச் சிந்திக்கச் செய்கிறது. இக் குறள்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் — குறள்