கதைகள் கட்டுரை

கருமித்தனமும் சிக்கனமும்

பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.

அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்றபோது, அங்கே —

“வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி—குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’—என்று அருகில் உள்ளவரைக் கேட்க,

“வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும்போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான்.

—இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார். பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க,

“அங்கே செல்வன், தன் வேலைக்காரன் பத்து பருப்பு சிந்தியதற்குப் பத்து குத்து குத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துப் பயந்து நான் கேட்காமலே திரும்பி வந்துவிட்டேன்”—என்றார்.

“இப்போது போய்க் கேளும்” —என்று நாயகத்தின் கட்டளை பிறந்தது.

மவுல்வி—சிறு நடுக்கத்துடன் அப்பணக்காரனிடம் போனார். அப்போது அங்கே, அவன்,

ஒரு வேலைக்காரனைத் தூணிலே கட்டிவைத்து சவுக்காலே அடித்து—10 சொட்டு இரத்தம் எடுக்க அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது என்ன என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்க,

‘அவன் எண்ணெய் வாங்கி வரும்போது 10 சொட்டு சிந்திவிட்டான். அதற்கு அவன் உடலிலே ரத்தம் 10 சொட்டு எடுக்கச் சவுக்கால் அடிக்கிறார்கள்\’—

இது சொல்லக் கேட்டதும் மவுல்வி நடுங்கி, பணக்காரனிடம் சென்று கேட்காமல் திரும்பினார். நாயகமிடம் வந்தபோது—

‘எவ்வளவு பணம் கொடுத்தார்?’ என்று பெருமானார் கேட்கவே—சவுக்கால் அடித்து ரத்தம் எடுத்த கதையைச் சொல்லி,

இம்மாதிரிப் பேர்வழிகளிடம் சென்று, நல்ல காரியத் துக்கு (பள்ளி வாசல் கட்ட) பணம் கேட்க நாவு கூசுகிறது. அச்சமாக இருக்கிறது—பயந்து வந்து விட்டேன் என்று மவுல்வி சொன்னதும், \’மீண்டும் போய்க் கேளும்’—என்று பெருமானார் உத்தரவிடவே,

மவுல்வி சென்றார். நல்ல வேளையாக, அங்கே கடு நிகழ்ச்சியொன்றும் நடைபெறவில்லை. செல்வந்தனைக் கண்டதும், அன்புடன் வரவேற்று, வந்த காரியம் என்ன?” என வினவினான்.

தான் பள்ளிவாசல் கட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பொருள் வேண்டி வந்திருப்பதாகவும் மவுல்வி கூறினார்.

செல்வர் கேட்டார்—\’அந்த ஊரில் பள்ளி வாசல் இல்லையா?’

மவுல்வி — ‘ஆமாம்: இல்லை.’

செல்வர் — ‘என்ன செலவாகும்?’ என்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?’——

மவுல்வி — செலவு (பள்ளி வாசல் கட்ட) ஒரு லட்ச ரூபாய் ஆகும்.

நம் ஊரைச் சுற்றியுள்ள சிலர் 50,000 ரூ. வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தாங்கள் ஒரு பெருந் தொகையாக ரூ. 50, 000 கொடுத்தால் நல்லது என்று சொன்னார்.
உடனே அப்பணக்காரர், ஒரு லட்ச ரூபாயும் மவுல்வியிடம் கொண்டு வந்து கொடுத்து,

“உடனே பள்ளிவாசல் கட்டத் தொடங்குங்கள் மற்றவர்களிடம் சென்று பணம் வசூலிக்க—காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க வேண்டாம்—”

“நல்ல பணியை உடனே செய்யுங்கள்”—என்று கூறி அனுப்பினார்.

மவுல்விக்கு—‘என்னடா இது?— என்று தலை சுற்றியது.

10 பருப்பு சிந்தினதற்கு 10 குத்து குத்தினான்.

10 சொட்டு எண்ணெய்க்கு 10 சொட்டு இரத்தம் எடுக்கச் சவுக்கால் அடித்தான்.

—இப்படிப்பட்ட கருமி—நாம் ரூ. 50,000 கேட்டால், ஒரு லட்சம் எடுத்துக் கொடுக்கின்றானே—‘இது என்ன விந்தை?’

என்று வியந்து எண்ணிக் கலக்கமுற்று, நபி பெருமான் அவர்களிடம் சென்று,

‘கருமியின் நடத்தை புரியவில்லையே, காரண்ம் என்ன?’—என்று மவுல்வி கேட்டார்.

பெருமானார் :

‘நீ அவனைக் கருமி என்று நினைத்தது தவறு—அவன் எந்தப் பொருளையும் பாழாக்காமலும் வீணடிக்காமலும் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது—என்று விளக்கமாக எடுத்து விளம்பினார்.

நபியின் விளக்கம் கேட்டபின்பு—சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு—என்பது மவுல்விக்குப் புரிந்தது.

‘நமக்குப் புரிந்ததா!’

எட்டு மைல் தூரமுள்ள ஊருக்கு 20 ரூபா தந்து (டாக்சி) வாடகை வண்டி ஏறிப்போவது ‘இடம்பம்’. அதே தூரத்து ஊருக்குப் பேருந்து (பஸ்) போகிறது என்றால் 50 காசு கொடுத்து அதில் ஏறிப் பயணம் செய்வது ‘சிக்கனம்’.

அதுவும் கொடுப்பது ஏன் என்று 5 காசுக்கு அவல் கடலை வாங்கித் தின்று கொண்டே நடப்பது ‘கருமித்தனம்’

ஐநூறு, ஆயிரம் ரூபா என்று விலையுள்ள பட்டாடை புடவைகளை வாங்கிக் கட்டி வாழ்வது ‘டம்பம்’

தூய்மையான எளிய—அழகான ஆடை (புடவை) அணிவது ‘சிக்கனம்’.

அப்படியின்றி, அழுக்குடையும் கிழிசல் துணியும் தையல் தெரியும்படி உடுத்திக் கொண்டே இருப்பது ‘கருமித்தனம்’.

இவ்வாறாக, நமக்கு ஏற்ற முறையில் நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், நம் வாழ்விலே ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாகும், —

இதற்கும் இலக்கணம் உண்டு.

அஃது—தேவைக்கு மேல் செலவு செய்வது ‘இடம்பம்’

⁠தேவையின் அளவுச் செலவு செய்வது ‘சிக்கனம்’

⁠தேவைக்கும் செலவு செய்யாதது ‘கருமித்தனம்’

இதிலிருந்து சிக்கனம் எது?

கருமித்தனம் எது?—என்று நமக்கு நன்றாகப் புரிகின்றது.

நமக்கு மட்டும் புரிந்து…என்ன? நம் இல்லத்தில்

உள்ள ஒவ்வொருவருக்கும் புரியவைத்து—வாழ வைப்பதே நல்லது.