பாடநூல் பாடங்கள் கட்டுரை

பாரதியார்

மகாகவி பாரதியார் ஒரு தமிழ்க் கவிஞர். தன் தாய் மொழியான தமிழ் மொழி மீதும் தன் தாய் நாட்டின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தனது பாட்டுகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இதனால் இவர் \’தேசியக் கவி\’ எனப் போற்றப் பட்டார். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல எழுத்தாளர், செய்தித்தாள் ஆசிரியர், குமுகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகப் புலமை கொண்டவர். தன் இளம் வயதிலே பல இழப்புகளையும் வறுமையையும் எதிர்கொண்ட போதும் மன உறுதியுடன் குமுகச் சீர்திருத்தத்திற்கு போராடியவர் பாரதியார், பிரித்தானியரின் மேலாண்மையை எதிர்த்துப் பல கவிதைகள், கட்டுரைகள் எழுதி, செய்தித்தாளில் வெளியிட்டார். இதனால் ஆட்சியாளர்களால் சிறைப் பிடிக்கப்பட இருந்த போதிலும் “உச்சிமீது வான் வழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சி அச்சமென்ப தில்லையே” என வீர முழக்கமிட்டார். பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்திய மக்கள் மூடச் சிந்தனைகளால் அடிமைப் பட்டிருந்தனர். சாதி, மத வேறுபாடு, மூடக் கொள்கைகள், பெண்ணடிமைத் தனம் எனப் பல்வேறு முரண் பாடுகளைத் தமக்குள் கொண்டிருந்தனர். இந்நிலையைக் கண்டு “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” எனப் பாரதியார் வருந்தினார். பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாரதியார், நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன் பெண்கள் இருக்க வேண்டும் எனத் தன் பாடல்களில் வெளிப்படுத்தினார்.