பாடநூல் பாடங்கள் கட்டுரை

தமிழிலக்கிய வரலாறு

தமிழிலக்கிய வரலாறு

இவ்வுலகில் பல இன மக்கள் வாழ்கின்றனர்; பல வகையான மொழிகளைப் பேசுகின்றனர். நாம் தமிழர்கள். எமது தாய்மொழி தமிழ், தமிழ்மொழி மிகப் பழைமையான மொழி. உலகின் செம்மொழிகளுள் தமிழும் ஒன்றாகும். இன்று உலகெங்கும் ஏறத்தாழ 82 மில்லியன் மக்கள் தமிழ்மொழியைப் பேசி வருகின்றனர். காலந்தோறும் தமிழ்மொழியில் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய நூல்களும் நமக்குக் கிடைத்துள்ளன. இன்றும் தமிழ்மொழியில் நல்ல நூல்கள் இயற்றப்படுகின்றன. மக்களுக்கு அறிவும் இன்பமும் தரும் இந்த நூல்களை நாம் இலக்கியம் என்கிறோம். தமிழ் மக்கள் சிறந்த இலக்கியங்களைப் போற்றினர். தமிழர் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவு பெற்றனர். நல்ல ஒழுக்கங்களையும் பண்பாடுகளையும் கடைப்பிடித்தனர். இலக்கியங்களைக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றவர்கள், தாமும் இலக்கியங்களைப் படைத்தனர். முற்காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல்களாகவே இருந்தன. அப்பாடல்களைச் செய்யுள்கள் என்றும் அழைத்தனர். தமிழர்களின் இலக்கியம் நீண்ட வரலாறு கொண்டது. இந்த இலக்கியங்கள் வாயிலாகவே அனைவரும் பண்டைத் தமிழர் வாழ்வையும் வரலாற்றையும் தெரிந்து கொள்கின்றனர். தமிழர்களுடைய பண்பாடு, நாகரிகம், கலைகள் போன்றவற்றையும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சங்கப்பாடல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார் போன்றவை முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியங்களுள் சிலவாகும்.