பாடநூல் பாடங்கள் கட்டுரை

இளங்கோ அடிகள்

இளங்கோ அடிகள் சிறந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சேரநாட்டு அரசனான சேரலாதனின் இளைய மகனும் சேரன் செங்குட்டுவனின் தம்பியும் ஆவார். இவர் இளவரசுப் பட்டத்தைத் துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொண்டதால் அடிகள் எனச் சிறப்பிக்கப் பட்டார். இளங்கோ அடிகள் சிறந்த கல்வியறிவு உடையவர்; இறை வழிபாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். ஒருநாள் இளங்கோ அடிகள் தன் அண்ணனுடன் மலைவளம் காணச் சென்றார். அங்குக் கோவலன், கண்ணகியின் கதையைச் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலம் அறிந்தார். அக்கதை இளங்கோ அடிகளை மிகவும் கவர்ந்தது. சேரன் செங்குட்டுவனின் வேண்டுகோளுக்கு இணங்க இளங்கோ அடிகள் அதைச் சிலப்பதிகாரம் என்ற நூலாக இயற்றினார். சிலப்பதிகாரத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் விரவியுள்ளது. பழந்தமிழர் கலைகளின் சிறப்புக்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது. குடிமக்கள் வாழ்க்கையைக் கதையாகவும் களமாகவும் கொண்ட சிலப்பதிகாரம், தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. உயர் இலக்கியமான சிலப்பதிகாரத்தைத் தமிழுக்குத் தந்தமையால், இளங்கோ அடிகள் என்றும் அழியாப் புகழைப் பெற்றுள்ளார்.