பாடநூல் பாடங்கள் கட்டுரை

ஒழுக்கம்

இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், மாந்தர் மட்டும் சிந்தித்துச் செயற்படும் பகுத்தறிவை உடையவர்களாக உள்ளனர். எனவே, மாந்தர் நல்லொழுக்கம் உடையவர்களாக வாழ வேண்டும். உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், நன்றி மறவாமை போன்ற நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். மன அடக்கம் மற்றும் மன உறுதி உள்ளவர்களிடம் நல்லொழுக்கம் எனும் நற்பண்பு நிலைத்து நிற்கும். ஒழுக்கம் மேன்மையைத் தருவதால், உயிரினும் மேலானதாக ஒழுக்கத்தைப் பேணல் வேண்டும் என்பதை, ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் குறள் 131 எனும் குறள் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார். பொறாமை உடையவனிடம் செல்வம் சேர்வதில்லை. அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்வு இல்லை என்பதை, அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு குறள் 135 என்ற குறள் கூறுகிறது. தமிழ்மொழியில் திருக்குறள் மட்டுமல்ல ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, நாலடியார் போன்ற வேறு அறநூல்களும் ஒழுக்கம் பற்றி, சிறப்பாகக் கூறுகின்றன.