
தமிழர்கள் பொதுவாக இறந்தவர்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். தற்காலத்தில் இறந்தவரின் உடலைத் துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலைச் சவப்பெட்டியினுள் வைத்து அந்தச் சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும்.
ஆனால் பழந்தமிழகத்தில் இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். இந்த வழக்கமே ‘முதுமக்கள் தாழி’ எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டது.
ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தத் தாழியானது ஏழடி உயரம் வரைக்கும் செய்யப்பட்டிருக்கும்.
முதுமக்கள் தாழி முறையைப் பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. முதலாவதாகத் தாழியில் இறந்தபின்பு சடலத்தைச் சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்துப் புதைப்பது.
இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்துச் சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும்.
மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும்.
சிறு தாழிகள் இறந்த குழந்தைகளைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதுடன் குறைமாதத்தில் இறந்த குழந்தைகளுக்காக “தொட்டில்பேழை” எனப்பட்ட தாழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாழியைப் புதைத்த குழியானது மணல் இடப்பட்டு பாறையால் மூடப்பட்டதுடன் அப்பாறைமீது மணல் கொட்டி பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டது. பாறையைச்சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டன.
கேரளத்தின் குடைக்கல், தொப்பிக்கல் போன்றவை இத்தகைய தாளிகளே எனக்கூறப்படுகின்றது. இவற்றிலெல்லாம் தாழிகள் இருப்பதை மேலே உள்ள கற்சின்னங்கள் உணர்த்துவனவாக இருக்கின்றனவாம்.
முதுமக்கள் தாழி குறித்து, புறநானூற்றின் 228ம் பாடல் முழுமையாகக் கூறுகிறது. “குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்” என்னும் சோழ மன்னன் போரில் இறந்தபோது, ஐயூர் முடவனார் என்னும் புலவர் முதுமக்கள்தாழி செய்வதைத் தொழிலாகக் கொண்ட ‘மூதூர்க் கலஞ்செய் கோ’ என்பவரிடம் “எம்மன்னனின் பெருமைக்கு ஏற்ற முதுமக்கள் தாழியை நீ செய்துவிட முடியுமோ?” என்னும் பொருளில் அமைந்த பாடலொன்றைப் பாடியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-ப்ரியா ராமநாதன்