.
கடற்கோள் என்பது, கடலுக்கு அடியில் ஏற்படு நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரெனக் கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்துக் கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சியைக் குறிக்கும். இதனை ஆழிப்பேரலை என்றும் சுனாமி என்றும் அழைப்பர்.
பண்டைத்தமிழ்நாடு தன்னளவு சுருங்கியதற்கு கடற்கோளே முதற்கரணியம். இந்நாடு நான்கு பெருங்கடற்கோள்களைக் கண்டதென்று கருதுவர். கடற்கோள் நிகழ்ந்தமைக்கு கலித்தொகையின் முல்லைக்கலியும் மற்றும் சிலப்பதிகாரமும் சான்றுகாட்டி நிற்கின்றன.
கலித்தொகையின் முல்லைக்கலியில், கடல்பொங்கி பாண்டிய நாட்டை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. மேலெசென்று அருகில் உள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கிப் புகழுடைய மீன்கொடிநாட்டி பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.
“மலிதிரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்“
சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் கொடுங்கடல் சினந்தெழுந்து குமரிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை விழுங்கியதாகவும், பாண்டிய மன்னன் தனது வீரத்தை வெளிப்படுத்தி வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டு தனது ஆட்சி எல்லையை விரிவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையுமிமயமுங் கொண்டு
தென்னிசை யாண்ட தென்னவன்வாழி“
இந்த வரலாற்று குறிப்புகள் மட்டுமன்றி, நாமும் அண்மையில், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தைக் கண்டுள்ளோம்.