வயதான புறா
வயதான புறா
ஓர் மரத்தில் பல புறாக்கள் கூட்டமாக வசித்து வந்தன. அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து சென்று இரை தேடி உண்ணும்.
அவைகளிற்கெல்லாம் ஓர் தலைமைப் புறா இருந்தது. எல்லாப் புறாவும் தலைமைப் புறாவின் சொல்லைக் கேட்டு நடந்தன. இதைக் கண்டு ஓர் இளமையான புறாவிற்குப் பொறாமையாக இருந்தது.
அது மற்றைய புறாக்களிடம் இந்த வயதான புறாவின் சொல்லைக் கேட்காதீர்கள் எனக் கூறி வந்தது. வயதான புறாவிற்கு இன்றைய உலகத்தைத் தெரிவதில்லை. இது எம்மை முட்டாள் ஆக்குகின்றது என வயதான புறாவைப் பற்றிக் குறை கூறிக் கொண்டே வந்தது. நாளடைவில் மற்றைய புறாக்களும் இந்த இளமையான புறாவின் கதைக்கு மயங்கின. அவை வயதான புறாவின் சொல்லைக் கேட்பதே இல்லை.
ஒரு நாள் இளமையான புறா எல்லாப் புறாக்களையும் கூப்பிட்டது. நாம் வசிப்பதற்கு நல்ல இடம் பார்த்துள்ளேன். அந்த இடம் மிகவும் அழகானது. இரை தேடப் பலமணி நேரம் பறக்க வேண்டியதில்லை. நாம் இன்றே அங்கு போகலாம் வாருங்கள் என்றது. இதைக் கேட்டதும் எல்லாப் புறாக்களும் ஆனந்தப்பட்டன. அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகின.
அப்போது அந்த இடம் ஆபத்தானது எனத் தலைமைப் புறாக் கூறியது. அதன் சொல்லைக் கேட்காது அவை பறந்து போயின. கவலையுடன் தலைமைப் புறா தானும் அவர்களுடன் போனது.
ஓர் இடத்தில் நிறைய நெல் பரப்பி இருந்தது. அதைக் கண்டவுடன் எல்லாப் புறாக்களும் மிகவும் மகிழ்ந்தன. இளமைப் புறாவும் மிகவும் கர்வப்பட்டது. இந்த வயதான புறாவின் சொல்லைக் கேட்டு கஸ்டத்துடன் வாழ்ந்து விட்டோமே என எண்ணின.
இந்த இடம் ஆபத்தானது இங்கே வசிக்க வேண்டாம். வாருங்கள் திரும்பிப் போய்விடுவோம் என வயதான புறாக் கூறியது. எதுவுமே அந்த வயதான புறாவின் சொல்லைக் கேளாமல் அதனைத் துரத்தி விட்டன. வயதான புறாவும் மீண்டும் திரும்பித் தனது இடத்திற்குச் சென்று விட்டது.
இந்தப் புறாக்களை விட்டுத் தனியே இருக்க முடியாமல் மறுநாள் காலை மீண்டும் திரும்பி வயதான புறா வந்தது. அங்கே பெரும் அவலமாக அழுகுரல் கேட்டது. உடனே விரைந்து பறந்து போய்ப் பார்த்தது. அங்கே பல புறாக்களை ஒருவன் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்திருந்தான். அவற்றை இரைக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றான்.
தப்பிய புறாக்கள் கண்ணீர் விட்டு அழுதன. வயதான புறாவின் சொல்லைக் கேட்காது நடந்த துன்பத்ததை எண்ணி வருந்தின. வயதான புறாவும் கண்ணீர் விட்டு அழுதது. இருப்பவர்களாவது தப்பி வாழுங்கள் வாருங்கள் திரும்பிப் போகலாம் என அவற்றை மீண்டும் அழைத்துச் சென்றது. எனது அனுபவத்தையே உங்களிடம் கூறுகிறேன் என்றது வயதான புறா. அன்றிலிருந்து தப்பிய புறாக்களும் வயதான புறாவின் சொற்கேட்டு நடந்தன.